ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் மாவட்டம், கசாய் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார் படேல்(40). இவரது மனைவி அனிதா படேல்(35). இவர்கள் இருவரும் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
கடந்த சில நாள்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்த ராஜ்குமார், தன்னை யாரோ கொலை செய்யப் போகின்றனர் எனப் புலம்பிக்கொன்டே இருந்துள்ளார். மேலும், தற்காப்பிற்காக எப்பொழுதும் ஒரு தடியை வைத்துக்கொண்டே சுற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், குடிபோதையில் இருந்த அவர் தனது மனைவியிடம் 50 ரூபாய் கொடு எனக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவி பணத்தை தர மறுத்ததையடுத்து, தான் வைத்திருந்த தடியைக் கொண்டு அடித்தே மனைவியென்றும் பாராமல் அவரை அடித்து கொலை செய்துள்ளார்.
இதனால், மேலும் அச்சம்கொண்ட அவர், மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த மனைவியின் சடலத்தை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல்!