பத்தனம்திட்டா: கோயிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் அலுவலர், ஜனார்த்தனன் நாயர். இவரது மனைவி ரமாதேவி (50) கடந்த 2006ஆம் ஆண்டு மே 26ம் தேதி மாலை கொலை செய்யப்பட்டார். ரமாதேவியின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த சமயத்தில் ஜனார்த்தனன் வீட்டின் அருகே, கட்டடம் கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வசித்து வந்தார். ரமாதேவி கொல்லப்பட்ட பிறகு, சுடலைமுத்துவும் அவருடன் வசித்த பெண்ணும் காணாமல் போனார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்த கொலையில் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.
இதனை அடுத்து, சுடலைமுத்து மற்றும் அவருடன் நீண்ட நாட்களாக இருந்த பெண் ஆகியோர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு சுடலைமுத்துவுடன் வசித்து வந்த பெண் தென்காசியில் சிக்கினார். ஆனால், விசாரணையில் கொலைக்கு பின்னணியில் அவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ரமாதேவி கொலையில், ரமாதேவியின் கையில் கிடைத்த முடிதான் முக்கிய ஆதாரம். விசாரணையில், ஒரு கையில் 36 முடிகளும், மறுபுறம் 4 முடிகளும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, அந்த முடி இழைகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், கொலை நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் சோதனையின் அறிக்கை கிடைத்தது.