ஹைதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்து வருகிறார். இவரது சகோதரியான ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என முனைப்போடு செயல்பட்டு வருகிறார் ஷர்மிளா. இதனால், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இதனிடையே தெலங்கானாவில் பாதை யாத்திரை செல்ல ஷர்மிளா அனுமதி கோரியிருந்தார். ஆனால், போலீசார் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பாதை யாத்திரைக்கு அனுமதி கோரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதத்தை தொடங்கினார். தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்ததால், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமானதால், போலீசார் அவரை மீட்டு, உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஷர்மிளாவுக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடல் பலவீனமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டிஹைட்ரேஷன், ஆர்த்தோஸ்டேடிக் ஹைப்போடென்ஷன், அசோடீமியா உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். ஷர்மிளா ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், அவர் இரண்டு முதல் மூன்று வாரங்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கனா முதல்வர் வீடு முற்றுகை: ஆந்திர முதல்வரின் சகோதரி கைது!