டெல்லி: G20 மாநாட்டில் மருத்துவ அவசர உதவிகளுக்காக அதிநவீன உயிர் காக்கும் வசதிகளுடன் 80 மருத்துவக் குழுக்கள், 130 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவை விவிஐபிகள் செல்லும்போது உடன் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஐந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவமனைகள் உயர் விழிப்புடன் செயல்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
G20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், ஐரோப்பியா ஒன்றியத்தில் உச்சபட்ச அதிகாரிகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “டெல்லி அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், மருத்துவ அவசர நிலையை எதிர் கொள்ள அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவிஐபிகள் தங்கியுள்ள ஹோட்டல்களில் அவசர நிலைக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட 80 குழுக்கள் சுகாதாரத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 குழுக்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G20 மாநாட்டின்போது 70 உயர்ரக மற்றும் 60 அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். மேலும், ஐந்து அரசு மருத்துவமனைகள் உயர் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும். இதில், லோக் நாயக் மருத்துவமனை, ஜிபி பந்த் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனை அடங்கும். இது தவிர 3 தனியார் மருத்தவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில், ப்ரைமஸ் மருத்துவமனை - சாணக்யபுரி, மேக்ஸ் மருத்துவமனை - சாகேத் மற்றும் மணிபால் மருத்துவமனை - துவாரகா ஆகும்.