ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சொப்னலோக்(Swapnalok) பகுதியில் பிரபல வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள், குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழன் மாலை சுமார் 6 மணிக்கு ஏழாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்சார வயர்கள் மூலம் தீ மளமளவென பரவி 4 மற்றும் ஐந்தாவது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் தீ விபத்தால் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர்.
சம்பவ இடத்தில் குவிந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க போராடினர். 8வது மாடியில் சிக்கிக்கொண்ட பணியாளர்களின் அலறல் சத்தத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மாடியில் சிக்கியவர்கள் ஹைட்ராலிக் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர்.