ஹூப்ளி:கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அங்குஷ் கொரவி, ஹூப்ளியில் உள்ள கேஎல்இ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிஇ படித்துள்ளார். இவர் இங்கு இறுதியாண்டு படிக்கும்போதே, தனது துப்பாக்கிகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். இதற்காக ஆஸ்டர் டிபென்ஸ் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இங்கு அரசின் முறையான அனுமதியுடன் தனது ஆராய்ச்சியைத் தொடங்கிய கொரவி, இதுவரை தனது சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இருப்பினும் நாட்டின் ராணுவம், ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குத் தேவையான அதிநவீன துப்பாக்கிகளை தயாரித்துக் கொடுப்பதே தனது இலக்காகக் கொண்டிருந்தார்.
தற்போது அது நிறைவேற உள்ளது. இவ்வாறு இவர் தயாரித்த முதல் உள்நாட்டு துப்பாக்கி நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக வர உள்ளது. இந்த துப்பாக்கி தயாரிப்பிற்காக எந்தவொரு உதிரி பாகங்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள பொருட்களைக் கொண்டே இத்துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.