ஹமிர்பூர்: தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தூக்கமின்மை என்பது பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது. செல்போன்களில் மூழ்கிய இளைய தலைமுறையினருக்கு சரியான தூக்கம் என்பது இல்லாமல் போய்விட்டது. தூக்கமின்மைக்கு மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும்கூட, இயல்பான தூக்கத்தைப் பெறுவதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறுகிறார்கள், மருத்துவர்கள்.
இந்த நிலையில், ஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவர், தூக்கமின்மையை குணப்படுத்தவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் "ஹீலிங் பில்லோ" என்ற தலையணையை வடிவமைத்துள்ளார். ஹிமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கார்த்திகேயா, வைபரேட்டர் மற்றும் அக்குபிரஷர் தொழில்நுட்பத்துடன் கூடிய தலையணையை கண்டுபிடித்துள்ளார்.
இது தசைகளை இலகுவாக்கி எளிதாக தூங்க உதவும் என்றும், இதன் வைபரேட்டரைப் பயன்படுத்தி மசாஜ் செய்யவும், ஹீட்டரைப் பயன்படுத்தி வெப்பநிலையினை சீராக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிறுவப்பட்டுள்ள அக்குபிரஷர் தொழில்நுட்பம், அக்குபிரஷர் புள்ளிகளைத் தூண்டி பயனருக்கு ரிலாக்ஸான உணர்வைத் தரும் எனத் தெரிகிறது.