ஹைதராபாத்:அன்புள்ள என ஆரம்பித்து இப்படிக்கு என முடிக்கும் கடிதத்தின் இடைப்பட்ட எழுத்துக்கள் ஆயிரம், ஆயிரம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும். 90-களுக்கு முந்தைய கால கட்டம் வரை கடிதங்கள் பொக்கிஷங்களாகவே பார்க்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடையே தொலைந்து போன கடிதங்களை எங்குத் தேடுவது.
புறாக்களில் தூது அனுப்பும் மன்னர் காலம் முதல் கடிதம் வழியே காதலை வெளிப்படுத்திய கடைசி தலைமுறையான 90-ஸ் கிட்ஸ்கள் வரை கடிதத்தின் பங்கு ஈடு இனையற்றதாகவே இருந்தது. இன்று, கடிதம் என்றால் என்ன தெரியுமா என பாடம் எடுக்கும் அளவுக்குக் கடிதங்களின் பயன்பாடு குறைந்து விட்டது.
அந்த கடிதங்களின் பங்களிப்பை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் முந்தைய தலைமுறைக்கு நினைவுகளைப் புதுப்பிக்கும் விதமாகவும் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் கொண்டாடப்படுகிறது.
கடிதங்களால் ஈர்க்கப்பட்ட பிரிட்டிஷ் எழுத்தாளர் ரிச்சார்ட் சிம்ப்கின் கடந்த 2014ஆம் ஆண்டு உலக கடிதம் எழுதும் தினத்தை அறிமுகப்படுத்தினார். பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளோடு உரையாடும் அவர் "கடிதம் எழுதுங்கள், அது உங்கள் மரபணுவில் இருந்து வெளிப்படும் உணர்வுகளாகவும், உங்கள் கை ரேகைகளோடு பின்னிப் பிணைந்த வார்த்தைகளாகவும் இருக்கும்" என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவர் மத்தியிலும் கருத்தரங்கம், உரையாடல் நடத்தும் அவர் "சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி உங்கள் கைகளால் மற்றவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள்" எனக் கூறுகிறார். மேலும், மாணவர்களுக்கு எனப் பயிற்சிப் பட்டறைகளை நிறுவி அங்கு அவர்களுக்குக் கடிதம் எழுதும் வழிமுறைகளையும், முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளார்.
தமிழில் பிரபலமான காதல் கோட்டை, சீதா ராமம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் காதல் கடிதங்களை மையமாகக் கொண்டே உருவாகின. அந்த படங்களில் காதலர்கள் இடையே கடிதம் வழியே நடைபெறும் உரையாடலும், ஒரு கடிதத்திற்காக ஏங்கிக் காத்திருக்கும் நிமிடங்களும் அவ்வளவு அழகாகவும், கவித்துவமாகவும் வெளிப்பட்டிருக்கும்.
தமிழ்த் திரைப்படங்களில் தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்வோடு ஒத்துப்போகும் படங்களை இயக்குவதில் சேரன் தவிர்க்க முடியாதவர். அவர் இயக்கி நடித்த படம் "பொக்கிஷம்". அந்த படத்தில் கடிதத்தின் மீது தளும்பி வழியும் காதலைச் சொட்டச் சொட்டக் காட்சிப் படுத்தி இருப்பார்.
அந்த படத்தில் வரும் நிலா நீ வானம் காற்று பாடல் வரிகளில் காதலி தன் காதலனுக்கு அனுப்ப எழுதும் கடிதத்தில் "அன்புள்ள மன்னா.. அன்புள்ள கணவா.. அன்புள்ள கள்வனே.. அன்புள்ள கண்ணாளனே.. எனப் பல கோணங்களில் வர்ணித்து இருப்பாள்.
90-களுக்கு முன்பு உறவினர்களின் கடிதங்களுக்காகக் காத்திருக்கும் உறவுகளும், ராணுவ வீரனின் நலனை உறுதிப்படுத்தக் காத்திருக்கும் மனைவியின் ஏக்கமும் தபால் நிலையங்களிலேயே தங்கி இருந்திருக்கிறது. தொலை தூரத்தில் இருக்கும் நண்பனுக்கு எங்கோ இருந்து, மற்றொரு நண்பன் எழுதும் கடிதத்தில் கிண்டலும் கேலியும் கடந்து செல்லும்.
பலரின் கண்ணீர், சிலரின் மகிழ்ச்சி என அனைத்தும் கடிதங்கள் வழியேதான் தெரிவிக்கப்படும். இன்று அனுப்பும் கடிதம் அதற்கான உரிமையாளரைச் சென்றடையவும், அதற்குப் பதில் கடிதம் வரும் வரை காத்திருந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவுகள் மத்தியில் கடிதம் பொக்கிஷம்தான்.
மின் அஞ்சல் வழியும், சமூக வலைத்தளங்கள் வழியும் உடனுக்குடன் சென்றடையும் தகவல்களுக்கு மத்தியில், காத்திருந்து கடிதம் படித்து தனிமையில் மகிழ்ச்சி கொள்ளும் சுகம் தனித்துவம்தான். பேனாவின் வழியே காகிதத்தில் எழுதப்படும் வார்த்தைகள் வெறும் எழுத்துக்களாக மட்டும் இல்லாமல், ஒருவர் நமக்கான நேரத்தை ஒதுக்கி முக்கியத்துவம் தந்து எழுதும் கடிதம் காவியம் தான். உலக கடிதம் எழுதும் தினத்தைக் கொண்டாடுவோம்..! கடிதம் எழுதி மகிழ்வோம்.
(வாசகர்களே, "உங்கள் ஈடிவி பாரத் தமிழில் நாள் தோறும் Day Special சிறப்புச் செய்திகள் வெளியிடப்படும். இன்றைய நாள் சிறப்புச் செய்தியாக "உலக கடிதம் எழுதும் தினம்" குறித்து எழுதியுள்ளோம். நாளை (செப்,2) இதுபோன்று உலக தேங்காய் தினம் மற்றும் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் தொடர்பான சிறப்புச் செய்தி வெளியாகும்"..படியுங்கள்.! பயன்பெறுங்கள்.!)
இதையும் படிங்க:தமிழ், ஆங்கில எழுத்துகளை தலைகீழாக எழுதி வியக்க வைக்கும் தூத்துக்குடி இளம்பெண்!