கொழும்பு: இந்தியா வசமிருந்த கச்சத்தீவு 1976ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு மனிதர்கள் வசிக்காத பகுதி என்ற போதும், அங்கிருந்த அந்தோணியார் கோயிலே தீவின் அடையாளமாக மாறியிருந்தது. முன்பு இலங்கை மற்றும் தமிழ்நாடு மீனவர்கள் வலைகளை காய வைக்க பயன்படுத்திய தீவு தற்போது, இலங்கை கடற்படையின் சிறு முகாம் செயல்படும் இடமாக மாறியுள்ளது.
இந்நிலையில் தான் மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கெடுத்திருந்தனர். ஆண்டு தோறும் நடைபெறும் இத்திருவிழாவிற்காக இந்திய அரசு சார்பில் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை இலங்கை கடற்படை ஒருங்கிணைத்து நடத்தியது.
இந்தியாவிலிருந்து சென்ற பக்தர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையில், குடிநீர் உணவும் கூட முறையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்தியாவிலிருந்து சென்ற 2,281 பேரின் வருகையை பதிவு செய்ய ஒரே ஒரு கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் இதனால் 4 மணி நேரம் கடற்கரை வெயிலில் காத்திருக்க நேர்ந்தது எனவும் தமிழகத்திலிருந்து சென்று வந்தவர்கள் புகார் கூறினர்.
இலங்கை கடற்படையின் முழு கண்காணிப்பில் நடந்து முடிந்த நிலையில் தீவில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன், பொருளாதார மீட்சியிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்பை மறுக்கவோ மறைக்கவோ முடியாது என கூறினார். இந்திய அரசு கச்சத்தீவு விழாவுக்காகவும் 4 கோடி ரூபாய் வழங்கிய நிலையில், இந்திய குடிமக்களை நடத்திய விதம் கண்டிக்கத் தக்கது என அவர் கூறினார்.