தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி - madras high court

புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பரப்புரை செய்தது எப்படி என புதுவை பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் , madras high court
புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

By

Published : Mar 31, 2021, 4:36 PM IST

புதுச்சேரி:பாஜக சார்பில் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து, அதன் வழியாகத் தேர்தல் பரப்புரை செய்துவருவது குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறை விசாரணை நடத்திவருவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்தது.

மேலும், வாக்களர்களுக்கு ஒட்டுமொத்தமாகக் குறுஞ்செய்தி (BULK SMS) மூலம் பரப்புரைசெய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதிபெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் விளக்கம் கேட்டு பாஜகவிற்கு மார்ச் 7ஆம் தேதி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 8ஆம் தேதி விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வதுபோல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சைபர் குற்றப்பிரிவு விசாரித்துவருவதாகவும், அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையமும், தேர்தல் ஆணையமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்றும் ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல்செய்தார்.

தேர்தல் ஆணையம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் அழைப்பாணைக்கு பாஜக அளித்த விளக்கத்தை நிராகரித்துள்ளதாகவும், இது குறித்து காவல் துறை விசாரித்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமான முழுமையான விசாரணை அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளை (ஏப்ரல் 1) தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல, முகவர்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வகையில் 4.3 லட்சம் ரூபாய் செலவழித்ததாக, பாஜக கட்சி வேட்பாளர்களின் செலவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், கட்சியினர் மூலம் சேகரிக்கப்பட்ட செல்போன் எண்களை முகமைகளுக்கு அளித்து அதன்மூலம் பரப்புரை செய்துகொண்டதாக விளக்கமளித்தார்.

பாஜக தரப்பு பதில் மனு தங்களுக்கு இன்று காலைதான் கிடைத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையைத் தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (ஏப்ரல் 1) தள்ளிவைத்தனர்.

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது எப்படி? எனப் புதுச்சேரி பாஜகவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்கள் நேர்மையாக, நியாயமாக செலுத்த அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

பல பிரச்சினைகள் இருந்தாலும், நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், நம்பகத்தன்மையை இழந்தால் உலக நாடுகள் மத்தியில் நம் நாட்டின் மதிப்பு வீழ்ந்துவிடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாகத் திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க:அவரவர் தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்பக் கல்வி - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details