டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமத் நகரில் கடந்த 6ஆம் தேதி ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெடிப்பால், பல்வேறு வீடுகள் மற்றும் கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தும் விழுந்தன. இதனிடையே நில அதிர்வு காரணமாக ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதையும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகின.
சம்பவ இடத்தை பார்வையிட்ட உத்ரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதியில் இருந்த மக்கள் அரசு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
ரூ.1.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு:ஜோஷிமத் நகரில், புவியியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நில வெடிப்பால் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட மக்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்தது. வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாகவும், வாடகை வீட்டில் வசிக்க விரும்பும் மக்களுக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் என 6 மாத காலத்திற்கு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.
தொடர்ந்து நில வெடிப்பால் சேதமான கட்டடங்கள், குடியிருப்புகள் கணக்கெடுக்கப்பட்டன. அதிகளவில் சேதமான ஹோட்டல் மவுன்ட் வியூ மற்றும் ஹோட்டல் மலாரி கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் நிலவுவதாகவும், அருகில் உள்ள குடியிருப்புகளில் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதிகாரிகள் அறிக்கை அளித்த நிலையில், இரு ராட்சத கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
இரு ஹோட்டல்கள் இடிப்பு:இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இரு ஹோட்டல்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் மற்றும் கட்டடங்கள் இடிக்கும் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே நில வெடிப்பு மற்றும் மண் சரிவு ஏற்பட்ட ஜோஷிமத் நகரின் முதல் செயற்கைக்கோள் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.