புனே: மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வப்னில் விபீஷன் சாவத் (23) என்ற இளைஞர், முல்ஷியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பிரியங்கா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் காசர் அம்போலியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஸ்வப்னில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்கு தடையாக இருந்த முதல் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தான் பணிபுரியும் தனியார் மருத்துவமனையிலிருந்து ஆபத்தான மருந்துகளை திருடி வந்து, மனைவிக்கு ஊசி வழியாக செலுத்தியுள்ளார். பிரியங்கா உயிரிழந்தவுடன், ஏதும் அறியாதவர்போல உடலை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சடலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், திடீர் மரணம் குறித்து சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஸ்வப்னில் சாவத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஸ்வப்னில் இரண்டாவது திருமணம் செய்வதற்காக, மனைவி பிரியங்காவை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்வப்னில் சாவத்தை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திஷா சாலியன் உயிரிழப்பு தற்கொலையல்ல - சிபிஐ