மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், குரங்குகளுக்கு பயந்து மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு, கம்பவுண்டர் ஒருவர் விஷ ஊசி செலுத்தியதாகத்தெரிகிறது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், ஏதோ தவறு நடந்துள்ளதாக சந்தேகித்த மருத்துவர்கள் சிசிடிவி பதிவுகளைப் பார்த்தனர். அதில், மருத்துவர் வேடத்தில் வந்த இளைஞர் ஒருவர், சிறுமிக்கு ஊசி போட்டுவிட்டு தப்பியோடியது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் மற்றொரு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிபவர் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து கம்பவுண்டர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, சிறுமியின் தந்தைதான் கொலை செய்யச் சொன்னதாக ரமேஷ் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தையிடம் விசாரித்ததில், மகள் காதலிப்பது பிடிக்காததால் கம்பவுண்டரை வைத்து கொலை செய்ய முயன்றதாக ஒப்புக்கொண்டார்.