கோழிக்கோடு:கேரள மாநிலம் அரிக்குளம் பகுதியை சேர்ந்த கோரோத் முகமது அலியின் மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டான். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஐஸ்க்ரீமை சாப்பிட்ட ஹாசன் வாந்தி எடுத்ததால், அவனை முத்தம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மேப்பயூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் ஹாசன் சேர்க்கப்பட்டான்.
எனினும் அவனது உடல்நலம் மோசமானதால், கடந்த திங்கள்கிழமை மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடற்கூராய்வுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் உடற்கூராய்வின் போது சிறுவன் ஹாசனின் உடலில் அமோனியம் பாஸ்பரஸ் என்ற விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது ஹாசன் சாப்பிட்ட ஐஸ்க்ரீம், அரிக்குளம் பகுதியில் உள்ள கடையில் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.