மேற்கு வங்காளம்(ஹூக்லி): ஹூக்லி மாவட்டத்தைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேசிய அளவிலான தூக்கப் போட்டியில் கலந்துகொண்டு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வென்றுள்ளார். திரிபர்னா சக்ரபோர்த்தி எனும் இவர் தனது சிறுவயது முதலே தூக்கத்தில் சிறந்தவராக விளங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு தனியார் மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான தூக்கப்போட்டியில் வென்றதன் மூலம் நாட்டின் தூக்கத்தில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்துள்ளார், திரிபர்னா. இந்தப்போட்டியில் இவர் தொடர்ச்சியாக 100 நாட்கள் 9 மணிநேரம் தூங்கி,போட்டியில் வென்றுள்ளார். இதில் வென்றதற்காக 5.5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் திரிபர்னாவிற்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீராம்பூரைச் சேர்ந்த திரிபர்னா தன் வாழ்நாளில் எந்த நேரத்தில் வரும் தன்னுடைய தூக்கத்தையும் தவறவிட்டதே இல்லையாம். அது தனது வேலைக்கான நேர்காணலாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி, தூக்கம் வந்தால் திரிபர்னா தூங்காமல் இருந்ததில்லை.
அதனின் பிரதிபலிப்பாக தற்போது இத்தகைய போட்டியில் இவர் வென்றுள்ளார். இவரது இந்த வெற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களிலும் திரிபர்னாவின் வெற்றியைப் பகிர்ந்தும் வாழ்த்தியும் வருகின்றனர். மேலும், இத்தகைய போட்டியைப் பற்றிய விவரமும் திரிபர்னாவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தெரிய வந்தது எனவும் கூறியுள்ளார்.
தன்னுடன் போட்டியிட்ட அனைத்துப்போட்டியாளர்களையும் பின் தள்ளிய திரிபர்னா அதிக மணி நேரங்கள் தூங்கியுள்ளார். அவரின் தூக்க மதிப்பெண் 100ற்கு 95. தற்போது ஓர் அமெரிக்க நிறுவனத்தில் திரிபர்னா பணிபுரிந்து வருகிறார். அங்கு இரவில் வேலை பார்க்கும் திரிபர்னா பகல் முழுவதும் தூங்கும் பழக்கத்தைக்கொண்டவர்.
ஆரம்ப காலத்தில் திரிபர்னாவின் தூக்க பழக்கங்களை கேலி, கிண்டல் செய்த சுற்றத்தினர் மற்றும் உறவினர்கள் தற்போது அவரது வெற்றியை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஞானவாபி மசூதியில் உள்ள இந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிகோரிய மனு: எதிர்த்த வழக்கு தள்ளுபடி!