பொங்களூரு: கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் நெலகி (22). இவரும் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல், சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, சிறுமியின் குடும்பத்தினர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து பலமுறை எச்சரித்துள்ளனர். இதனால் இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர்.
பின்னர் செல்போன் வழியாக மீண்டும் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, ‘நான் திருமணம் செய்தால் நெலகியைத்தான் திருமணம் செய்வேன்’ என சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சிறுமியின் சகோதரர் உள்பட சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, இருவரையும் அழைத்துக் கொண்டு உறவினர்கள் சென்றுள்ளனர். ஆனால், காதலர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனைத்தொடர்ந்து விஸ்வநாத் நெலகியின் தந்தை அக்டோபர் 3ஆம் தேதி நர்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி மீண்டும் கடத்தல் புகாரையும் நெலகியின் தந்தை அளித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக சிறுமியின் சகோதரர் ரவி ஹூலன்னன்னவாரா (19), அவரது உறவினர் ஹனுமானந்தா மல்நதடா (22) மற்றும் பீரப்பா தல்வாயி (18) ஆகிய மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.