அதிகரித்துவரும் கரோனா நோய்த் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் புதிய வழிகாட்டுதல்களை உள் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, மத்திய உள் துறைச் செயலர் அஜய் குமார் பல்லா இன்று அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலர்களுடன் காணொலி வாயிலாக கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அஜய் குமார் பல்லா, “சுகாதார வல்லுநர்கள், அமலாக்க நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் 31ஆம் தேதிவரை இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும்.
வழிகாட்டுதல்களை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கரோனாவை வெல்ல வேண்டுமெனில், நாட்டு மக்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
சரிந்திருந்த கோவிட்-19 பாதிப்பு தீபாவளி பண்டிகையை அடுத்து தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மொத்த பாதிப்பில் 61% பங்கு வகிக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது" எனத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு: தலைமைச் செயலர்களுடன் கலந்துரையாடிய மத்திய உள் துறைச் செயலர் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 44 ஆயிரத்து 489 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கேரளாவில் ஆறாயிரத்து 491 பேரும், மகாராஷ்டிராவில் ஆறாயிரத்து 159 பேரும், டெல்லியில் ஐந்தாயிரத்து 246 பேரும் புதிதாக தொற்றுநோய்க்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க :இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!