லக்கிஷராய் :அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியா, அல்லது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா என மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றும், காங்கிரஸ் 20 முறை தோல்வியை தழுவிய கட்சி என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பீகார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடந்து பேரணியில் பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த முதலமைச்சர் நிதிஷ் குமார், தற்போது ஊழல் கறை படிந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து உள்ளதாக அமித் ஷா கூறினார்.
மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை ஏமாற்றி வருவதாக அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் பிரதமர் மோடியா அல்லது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியா என பீகார் மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என அமித் ஷா தெரிவித்தார்.
தேர்தல் களத்தில் 20 முறை காங்கிரஸ் கட்சி முயற்சித்தும் தோல்வியையே தழுவி உள்ளதாக அமித் ஷா கூறினார். மேலும் கடந்த வாரம் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் குறித்து பேசிய அமித் ஷா, 20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்று சேர ஒப்புக்கொண்டது உண்மைதான் என்றும் 20 லட்சம் கோடிக்கு மேல் நடந்த ஊழல்களுக்கு இந்தக் கட்சிகள் சேர்ந்து தான் காரணம் என்பதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.