கேரளா: கொச்சி விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. 6E6482 என்ற இண்டிகோ விமானத்திற்கு இன்று (ஆகஸ்ட் 28) காலை 10.30 மணியளவில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபரால் தொலைப் பேசி மூலம் வந்த தகவலால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை உறுதி செய்ததையடுத்து விமான நிலைய அதிகாரிகள் நெடும்பசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விமான நிலையத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மர்மநபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தை உடனடியாக அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
பின்னர், விமானத்திலிருந்த 139 பயணிகளும் ஒரு கைக்குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு விமான நிலையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணைக்கு விமான நிலைய இயக்குநரின் தலைமையில் வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டது. அதில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் QRT சோதனையில் ஈடுபட்டது. பின்னர், மாநில காவல்துறை மற்றும் கொச்சி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் RFF அடங்கிய பாதுகாப்புப் படையினரும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.