பெங்களூரு :224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே 10 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பெருவாரியான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன.
தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் 132 தொகுதிகளிலும், பாஜக 67 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பணிகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தொகுதிகளில் வெற்றி பெற்ற மற்றும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்களை உடனடியாக புறப்பட்டு பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்து உள்ளது. நாளை, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த முதலமைச்சர் யார், அமைச்சரவையில் இடம் பெறப் போகும் உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம் கர்நாடகாவில் வரலாறு மீண்டும் திரும்பி இருக்கிறது என்று கூறும் நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.
ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்கு பிறகு 130க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அமைக்க உள்ளது. கடைசியாக 1999 ஆம் ஆண்டு 132 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன்பின் நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி முழு வேட்கையுடன் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நடாக மாநிலம் துவக்கப்பட்டு நடந்த முதல் 6 தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின் நடந்த இரண்டு தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு காங்கிரஸ் இல்லாத முதல் ஆட்சி அமைக்கப்பட்டது.
ஜனதா பரிவார் தலைவர் ராமகிருஷ்ண ஹெட்ஜ் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காங்கிரஸ் இல்லாத முதல் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் - ஜனதா தளம் என தொடர்ந்து கர்நாடகாவில் இருமுனை போட்டி நிகழ்ந்து வந்தாலும், கடந்த 2004 ஆம் ஆண்டு கூட்டணியுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. இருப்பினும் கூட்டணி வாக்குறுதியின் படி 20 மாதங்களுக்கு ஜனதா தளம் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கவில்லை.