பீமாவரம்: ஆந்திர மாநிலம் பீமாவரம் நகரில், சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில், ஆந்திர ஆளுநர் பிஸ்வா பூஷன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாடு இந்த ஆண்டு ஒருபுறம் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. மறுபுறம் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125ஆவது பிறந்தநாள் விழாவும், ராம்பா கிளர்ச்சியின் 100ஆவது ஆண்டு தினமும் கொண்டாடப்படுகிறது. ராம்பா கிளர்ச்சிக்கு அல்லூரி தலைமை தாங்கினார். அவரை காடுகளின் நாயகன் என மக்கள் அழைத்தனர். அவர், சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், ஆதிவாசிகள் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இளம் வயதிலேயே உயிர்த்தியாகம் செய்தவர். அவரது வாழ்க்கை ஒரு முன்னுதாரணம். அல்லூரி இந்திய கலாச்சாரத்தின் அடையாளம், ஆதிவாசிகளின் அடையாளம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிந்து நின்றவர்.
சுதந்திர போராட்டம் என்பது குறிப்பிட்ட சில ஆண்டுகளின், சில பகுதிகளின் அல்லது சில மக்களின் வரலாறு இல்லை, மாறாக அது, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்த மக்களின், அவர்களது தியாகத்தின் வரலாறு.