சமீபத்திய தேர்தல்களில் நாட்டில் வாக்களிக்கும் முறை பெரும்பாலும் ஒரு சாதி / மத அடிப்படையில் இருக்கும் போது, கேரளாவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் வாக்களிக்கும் முறை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.
உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்ததாகத் தோன்றியது.
வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்
இவற்றுக்கு எதிராக பாஜக மேற்கொண்ட தந்திரங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எந்தவொரு சாதகமான முடிவையும் எடுக்கத் தவறிவிட்டன. இந்த வெற்றியானது, அடுத்த நான்கு அலல்து ஐந்து மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும்.
'வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சர் பினராயி விஜயன் இடது முன்னணி பரப்புரையில் முக்கிய நபராக இருந்தார். கேரளாவில் எந்த அரசாங்கமும் சமீபத்திய காலங்களில் அதன் தலைவர்களுக்கு எதிராக இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதலை எதிர்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சிகள் மறைக்க முடியவில்லை
பெரும்பாலும் அரைகுறை உண்மைகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியோர் ஊடகங்களில் வெறுக்கத்தக்க பரப்புரையை மேற்கொண்டபோதும், உள்ளாட்சி அமைப்பின் மூன்று கட்ட வாக்கெடுப்புக்கு நெருக்கமான நாட்களில் அரசாங்கம் அதன் குரலை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க போராடியது. எவ்வாறாயினும், உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் தற்போதைய ஆட்சி மேற்கொண்ட சமூக நலத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை எதிர்க்கட்சிகளால் மறைக்க முடியவில்லை என்று முடிவுகள் காட்டுகின்றன. அங்கு பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றி மட்டுமே யோசித்தனர்.
எல்டிஎஃப்(LDF) ஆறு மாநகராட்சிகளில் மூன்றில் அறுதி பெரும்பான்மையுடனும், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய இரண்டு மாநகராட்சியை சுயேட்சைகள் மற்றும் போட்டி வேட்பாளர்கள் ஆதரவோடு கைப்பற்றக்கூடும்.
14 மாவட்ட பஞ்சாயத்துகளில், 2015 தேர்தலின் போது 7 மட்டுமே வென்ற எல்.டி.எஃப் தற்போது 10ஐை வென்றுள்ளது. LDF வெற்றிபெற முடியாது என்று கூறப்படும் நகராட்சிகளைப் பொறுத்தவரை, அது 86 நகராட்சிகளில் 35ஐை வென்றுள்ளது.
இங்கே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2015 தேர்தலுடன் ஒப்பிடும்போது, மேலும் ஒரு நகராட்சியை வென்று அவற்றின் எண்ணிக்கையை இரண்டாக்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 45 நகராட்சிகளை வென்றாலும், மேலும் நான்கு நகராட்சிகளின் தலைவிதி சுயேட்சை வேட்பாளர்களின் கைகளில் உள்ளது.
152 தொகுதி பஞ்சாயத்துகளில் 112இல் LDF வெற்றி பெற்றுள்ளது. 2015 தேர்தலில் LDF 89 தொகுதி பஞ்சாயத்துகளை மட்டுமே வென்றது. UDF 40 தொகுதி பஞ்சாயத்துகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, மீதமுள்ள முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
941 கிராம பஞ்சாயத்துகளில், LDF 514ஐை வென்றது. UDF 377 மற்றும் NDA 22ஐை வென்றுள்ளன. சுயேட்சைகள் மற்றும் பிற சிறிய கட்சிகள் 28 கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ளன. துல்லியம் மற்றும் செயல்திறனுடன் நிர்வாக பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ள நாட்டின் மிகச் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றாக கேரளா உள்ளது.
கேரளாவில் அரசு பேரிடர்களை எதிர்கொண்டபோது ஊராட்சி மன்றங்கள், அவர்களின் அரசியல் சார்பை பொருட்படுத்தாமல், வெளிப்படையாகவே ஈடுபட்டனர். நிப்பா வைரஸ் மாநிலத்தை உலுக்கியபோது, இதுபோன்ற ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாக முறையின் செயல்திறனை பொதுமக்கள் கண்டனர்.
வெளிச்சம் பெற்ற கேரளா
கேரளாவில் வெள்ள பேரழிவின் போது உள்ளூர் அமைப்புகளின் தலையீடு, தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறனில் மக்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும்போது கேரளா மீண்டும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதன் "மைக்ரோமேனேஜ்மென்ட்" மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
தற்போதைய அரசாங்கம் இதுபோன்ற கடினமான காலங்களில் அதன் தொலைநோக்கு செயல்பாட்டின் பலன்களைப் பெற்றுள்ளது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் நாட்டிலேயே முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்ட சில வாரங்களிலேயே ரூ.20,000 கோடி நிவாரண உதவியை அறிவித்தது.
ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பைத் தொடர்ந்து கேரளாவில் வசிக்கும் யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதையும், மாநிலம் முழுவதும் சமூக சமையலறைகளை நிறுவுவதையும், அது உறுதி செய்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் வழக்கமான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
இது முதியோர் ஓய்வூதியத் தொகையை அதிகரித்ததுடன், தொழிலாளர் வர்க்க சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்குப் பல சமூக நலத் திட்டங்களையும், நிவாரண நிதிகளையும் அறிமுகப்படுத்தியது.
இது சமூக அமைப்புகள், நிதி அளிப்போர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்து நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைத்தது. இத்தகைய செயல்பாடுகள் வாக்காளர்களுக்கு தெளிவாகத் தெரிந்தபோது, உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் LDF அரசாங்கம் சிறப்பாக வெற்றிபெற உதவியது.