கொல்கத்தா: இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த, அம்பாசிடர் கார்கள் ஒரு காலத்தில் அதிகார வர்க்கத்தினரின் அடையாளமாகவும், பெருமையாகவும் திகழ்ந்தது. நவீன சொகுசு கார்களின் வருகையால் அம்பாசிடர் கார்களின் மவுசு குறைந்ததையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுத்தியது.
இந்த நிலையில், இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்திய அம்பாசிடர் கார்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அந்நிறுவனத்தின் பழைய தொழிற்சாலையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக, ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் பாசு, "முதலில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கவும், பின்னர் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ், ஐரோப்பிய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முழு செயல்முறையும் முடிவதற்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். முதற்கட்டமாக 300 முதல் 400 கோடி ரூபாய் வரை இதில் முதலீடு செய்யப்படும். அம்பாசிடர் 2.0-ன் வடிவமைப்பு பணிகள் முடிந்த பிறகு, அவற்றை சென்னையில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூரில் பிரம்மாண்ட பழக் கண்காட்சி; சுற்றுலா பயணிகள் உற்சாகம்