வாரணாசி (உத்தரப்பிரதேசம்): ஞானவாபி வழக்கில், இந்து தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் சர்வதேச தலைவர் ஜிதேந்திர சிங் பிசன், அஞ்சுமன் இன்டெஜாமியாவின் ‘நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு’ என்பதை முன்மொழிந்த பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்து தரப்பின் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதில் சட்டப்பூர்வ மதிப்புகள் இல்லை. சிபிசியின் உத்தரவு 23 ஆனது, அனைத்து தரப்பும் ஒத்துக்கொள்ளாத வரையில், சமரசத்தை உருவாக்க முடியாது என தெரிவித்து உள்ளது. நாடு மற்றும் சமூகத்தில், ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், தனிநபரோ அல்லது கட்சியோ தீர்வு காண விரும்பினாலும், அது அவர்களால் முடியாது.
எனவே, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண முயல்வது சிபிசி-இன் கீழ் முடியாத ஒன்று. அதேநேரம், இது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது. எங்களது கட்சி அல்லது தனிநபரும் தீர்வுக்குத் தயாராக இல்லை. இந்த ஊடகத்தின் வாயிலாக நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி தீர்வோ அல்லது சமரசமோ செய்து கொள்ள முடியும்? ஒரு இடத்தில் சமரசம் ஏற்பட வேண்டும் என்றால், நீங்கள் சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.
அதேபோல், மற்றொரு தரப்பில் சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒரு இன்ச் அளவிலான நிலத்தைக் கூட கொடுப்பதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு அனைத்து பகுதிகளும் வேண்டும். நீங்கள் (முஸ்லீம் தரப்பு) ஒரு கோயிலை மசூதியாகப் பயன்படுத்தி உள்ளீர்கள். கோயில் வளாகத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கு முஸ்லீம் தரப்பு மன்னிப்பு கோர வேண்டும். எனவே, இங்கு சமரசத்திற்கு இடமில்லை” என தெரிவித்து உள்ளார்.