ஹைதராபாத்: சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம உரிமை மற்றும் சமூக நீதிக்கு சனாதன தர்மம் எதிரானது என்றும், எனவே அதனை எதிர்த்தால் மட்டும் போதாது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனவும், மேலும், டெங்கு, கரோனா போன்றவற்றை ஒழித்துக்கட்ட முயற்சிப்பது போன்றுதான் சனாதன தர்மமும் என கூறி இருந்தார்.
இதற்கு பாஜக உள்ளிட்ட பிற கட்சி பிரமுகர்கள், இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராம ஜென்மபூமியின் தலைமை மதகுரு ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (Acharya Satyendra Das) கூறுகையில், “சனாதன தர்மத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒழிக்க முடியாது. அது நூற்றாண்டு கடந்து தொடர்கிறது. இனியும் இருக்கும். அவர் (உதயநிதி ஸ்டாலின்) சனாதன தர்மத்தின் உண்மையான அர்த்தம் புரியாமல் இருக்கிறார். அவர் சனாதன தர்மம் பற்றி என்ன கூறி இருந்தாலும், அது முற்றிலும் தவறானது” என்றார்.
அதேபோல், இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி (Swami Chakrapani), “சனாதன தர்மம் நூற்றாண்டு கடந்தது. இனியும் அது இருக்கும். INDIA கூட்டணியில் இருக்கும் நபர்கள் பிரதமருடன் போரிடாமல், சனாதன தர்மத்துடன் போரிடுகின்றனர். சனாதன தர்மத்தை முடிவுக்கு கொண்டு வருவதுதான் அவர்களது நோக்கம். நாங்கள் ஸ்டாலினின் சித்தாந்தத்தையோ அல்லது கிறித்துவம் அல்லது இஸ்லாமியத்தையோ குறி வைக்கவில்லை. ஆனால், அவர்கள் மட்டும் ஏன் இந்து சனாதானத்தை எதிர்க்கிறார்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் (Acharya Pramod) கூறுகையில், “இந்துக்களை அவமதிப்பதில் தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அதனை அழிக்க முடியவில்லை” என தெரிவித்து உள்ளார்.
அதேநேரம், ஹைதராபாத்தில் உள்ள சில்குர் பாலாஜி கோயிலின் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் (Rangarajan) கூறுகையில், “உதயநிதி ஸ்டாலினின் பேச்சை பார்த்தோம், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என ஒப்பிட்டு பேசியது, லட்சக்கணக்கான மக்கள் அவர்களை விரும்பி காலத்தின் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நாட்டில் மிக மோசமான படையெடுப்புகளையும், அழிவுகளையும், பல இடிப்புகளையும், சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிரான அனைத்து விதமான அட்டூழியங்களையும் கண்டும், இன்னும் இதில் பிழைத்துக் கொண்டிருக்கிறது. திராவிட சித்தாந்தத்தின் அர்த்தம் என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பண்பாட்டை காப்பதற்கு என்ன செய்தீர்கள்? எனவே, தங்களது வாக்கு பலத்தை தமிழ்நாட்டு மக்கள் காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை மதிக்கும் ஒருவரை தேர்ந்தெடுங்கள்" என்றார்.
மேலும், அகில கர்நாடக பிராமிண் மகாசபாவைச் சேர்ந்த ராகவேந்திரா பட் (Raghvendra Bhat), “ஒருவரும் சனாதன தர்மத்தை முடித்து வைக்க முடியாது. மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவையே சனாதனத்தின் பார்வை. அது முடிவடைந்தால், படைப்பு முடிவடையும். பல மதங்கள் ஆரம்பித்து முடிந்து விட்டன, ஆனால், சனாதன தர்மத்திற்கு முடிவே இல்லை. அனைத்து இந்துக்களும் அவரது (உதயநிதி ஸ்டாலின்) அறிக்கையை கண்டிக்கிறார்கள். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல், ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சாரதா லட்சுமி நரசிம்மா பேட்டாவின் ஸ்ரீ ஸ்வயம்பிரகாஷா சச்சிதானந்தா சரஸ்வதி மஹாஸ்வம் (Sri Swayamprakasha Sachidananda Saraswathi Mahaswam) கூறுகையில், “இந்த உலகத்திலேயே மிகவும் பழமையான தர்மம், நமது சனாதன இந்து தர்மம். எனவே, இது அனைத்து மதங்களுக்கும் தாய் போன்றது. ஒரு சிலர், தங்களது வாக்கு வங்கி அரசியலுக்காக சனாதன தர்மம் குறித்து எதிர்மறையாக பேசி வருகின்றனர். இதற்கு எங்களது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:"சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!