அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில், பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களை கைப்பற்றி, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக மட்டும் தனியாகவே 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மையான இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளதால், ஆட்சியில் உடனே அமரும் என எதிர்பார்த்த நிலையில், முதலமைச்சர் யார் என்பதில் திடீரென சிக்கல் ஏற்பட்டது.
தற்போதைய அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தாலும், இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்று பெற்றுதற்கு கட்சியின் மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா தான் காரணம் என்ற கருத்தும் வலுக்கிறது. அவருக்கு, வலுவான நிர்வாக திறன் உள்ளதால், அவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சர்பானந்த சோனாவால், ஹிமந்த பிஸ்வா இருவருக்கும் சமமான பலம் உள்ளதால், முதலமைச்சரை அறிவிப்பதில் பாஜக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது.