சிம்லா:கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டுக்கு பின் மெல்ல மெல்ல மீண்டுவருகிறது. இந்தியாவிலும் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டின் முக்கிய சுற்றுலா மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த 10 மாதங்களில் 1.27 சுற்றுலாப் பயணிகள் வந்துசென்றுள்ளனர்.
இதுகுறித்து ஹிமாச்சல் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1.27 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துசென்றுள்ளனர். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் மொத்த சுற்றுலாத்துறையில் 7.3 சதவீத பங்கை வகித்துள்ளது.
கரோனா ஊரடங்குக்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 1.75 கோடி சுற்றுலா பயணிகள் ஹிமாச்சலத்திற்கு வந்துசெல்வர். ஆனால், 2020ஆம் ஆண்டு முதல் 32 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர். அதேபோல 2021ஆம் ஆண்டில் 57 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 2 மடங்காக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
பல நாடுகளில் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலில் வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். எந்த மாசுபாடும் இல்லாத காற்றை சுவாசிக்கலாம். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும், காடுகளும் மனதை அமைதியாக்கிவிடும் என்று சுற்றுலா பயணிகளின் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு