ஷிம்லா: தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான குறியீடுகளை தவிர்ப்பார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றி கூறாமல் மெளனம் காப்பார்கள். ஆனால், ஹிமாச்சலில் உள்ள மக்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். அதுவும் வித்தியாசமான முறையில் தெரிவிக்கிறார்கள். ஆம், மலை மாநிலமான ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள் குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவை தங்களது 'பாரம்பரிய பஹாரி தொப்பி' மூலம் தெரிவிக்கிறார்கள்.
பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், காவி அல்லது மெரூன் நிறத்திலும், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பச்சை நிறத்திலும் தொப்பியை அணிந்துள்ளனர். இந்த பச்சை, காவி என்ற பிரிவு, முறையே மாநிலத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இருந்து வந்தது. ஹிமாச்சலப்பிரதேசம் புவியியல் ரீதியாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேல் ஹிமாச்சல் மற்றும் கீழ் ஹிமாச்சல். இந்தப் பிரிவு ஹிமாச்சல் அரசியலை தீர்மானிக்கும் அடையாளங்களில் ஒன்றாகும்.
அதேபோல், இந்தப் பிரிவின் அடிப்படையில் தொப்பிகளை அணியும் போக்கு அரசியல் கட்சிகளால் வந்தது. ஆறு முறை காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த வீர்பத்ர சிங்கிற்கு பச்சை தொப்பி அணிவது பிடிக்கும். அவர் அணிவதைப் பார்த்து, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பச்சை தொப்பியை அணியத்தொடங்கினார்கள். அதன் பிறகு, பாஜக தலைவரும், இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவருமான பிரேம் குமார், மெரூன் நிற தொப்பியை தனது ட்ரேட் மார்க்காக மாற்றினார்.
1985ஆம் ஆண்டு முதல், ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறிக்கொண்டே இருந்தது. எந்த அரசியல் கட்சியும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சியைப் பிடிக்கவில்லை. தொப்பிகளின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது.