சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 17) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு தாக்கல் செய்தார். 2022-ம் ஆண்டு அவர் பதவியேற்ற நிலையில், தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இதுவாகும்.
இதுதொடர்பாக அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில், "ரூ.53,413 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இனி ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் "பசு வரி" விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 20,000 மாணவிகள் பயன்பெறும் வகையில், எலக்ட்ரிக் பைக் வாங்குவதற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும். அரசுப்பள்ளிகளுக்கு 40,000 மேசைகள் வழங்கப்பட உள்ளன.
மாநிலத்தில் உள்ள 5 மருத்துவக்கல்லூரிகளும் தரம் உயர்த்தப்படும். அங்கு ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் பணிகள் மேற்கொள்ளப்படும். எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் முன்னணி மாநிலமாக இமாச்சல் பிரதேசம் விளங்கும். ரூ.1000 கோடி மதிப்பில் தற்போதுள்ள 1,500 டீசல் பேருந்துகள், எலக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றப்படும். தனியார் பேருந்து நிறுவனங்கள் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 2026 மார்ச் 31ம் தேதிக்குள், இமாச்சலப் பிரதேச மாநிலத்தை முழுமையான பசுமை மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், கங்ரா மாவட்டம் சுற்றுலா தலைநகரமாக மாற்றப்படும். அடுத்த ஓராண்டுக்குள் ரூ.30 கோடி மதிப்பில் 12 மாவட்டங்களிலும் ஹெலிபோர்ட் வசதி கொண்டு வரப்படும்.
நீர் வளத்துறையை விரிவுபடுத்தும் விதமாக புதிதாக 5,000 ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். முதலமைச்சர் சிறு வியாபாரிகள் திட்டத்தின் கீழ், 1 சதவீத வட்டியுடன் ரூ.50,000 கடன் வழங்கப்படும். ஒரு கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய மின் சக்தி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக வாயுக்கள் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்படும். சிம்லா அருகே ரூ.1,373 கோடி மதிப்பில் ஜடியா தேவி நகரம் உருவாக்கப்படும். கல்வித்துறைக்கு ரூ.8,828 கோடி ஒதுக்கப்படுகிறது. அனைத்து உயர் நிலைப்பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில், ஆடம்பர பொருட்களுக்கு பசு வரி விதிக்கப்படுகிறது. மதுபானங்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 2 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த வரி பட்டியலில் இமாச்சல் பிரதேச மாநிலமும் இணைந்துள்ளது.
இதையும் படிங்க: "போலி கல்விச்சான்றை அளித்துள்ள பாஜக எம்.பி. துபே"... பதவியில் இருந்து நீக்க மஹூவா மொய்த்ரா கோரிக்கை