தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிஜாப் விவகாரம்: நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் மாணவிகள்; வகுப்புகள் புறக்கணிப்பு! - ஹிஜாப் விவகாரம்

பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடகா உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத்தொடுத்த உடுப்பியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உள்பட இஸ்லாமியப் பெண்கள், கல்லூரி வகுப்புகளையும், தேர்வையும் புறக்கணித்தனர்.

By

Published : Mar 16, 2022, 5:34 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடலோர மாவட்டமான உடுப்பியைச் சேர்ந்த ஆறு மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அஸ்வதி, நீதிபதி கிருஷ்ணா, நீதிபதி ஜேஎம் காசி ஆகியோரின் அமர்வு வழக்கை 11 நாள்கள் விசாரித்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று (மார்ச் 15) வழங்கப்பட்டது.

129 பக்கங்கள்கொண்ட தீர்ப்பு

நீதிபதிகள் 129 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில், ''இஸ்லாமில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை. மேலும், கல்வி நிறுவனங்களின் சீருடை தொடர்பான ஆணை வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, கர்நாடகா அரசு ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்து பிறப்பித்த அரசாணை செல்லும்" என உத்தரவிட்டனர். மேலும், மாணவிகள் தரப்பு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாத மாணவிகள், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், அவர் கல்லூரி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வழக்குத்தொடுத்த ஆறு மாணவிகள் இன்று கல்லூரியைப் புறக்கணித்துள்ளனர்.

'உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது'

ஷிவமொகா மாவட்டத்தில் உள்ள கமலா நேரு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த 15 மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்காததால் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர். 'ஹிஜாப் அணிவது தங்கள் மத உரிமை, அடையாளம். அதை விட்டுக்கொடுத்து, எங்களால் கல்லூரியில் நுழைய இயலாது' என அந்த மாணவிகளுள் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், 'இன்றுதான் எங்களின் அசைன்மென்ட்களை ஒப்படைக்க வேண்டிய நாள். ஆனால், வகுப்பறைக்குச்செல்ல எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை உள்ள அனுமதிக்க நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்தோம். அவர்கள் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்றார்கள். இது எங்கள் ஆசிரியர்களின் தவறில்லைதான். ஆனால், எங்களுக்கான நீதி கிடைக்கவில்லை' என்றார், மற்றொரு மாணவி.

'அரசு யாருக்கும் அஞ்சாது'

நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளாத இஸ்லாமியர்கள், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பத்கல் நகரில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். பத்கல் நகரில் பர்மா பஜார், மதினா காலனி போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடங்களின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் சி.என். அஸ்வத் நாராயணன்,"ஹிஜாப் விவகாரத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை எதிர்பார்த்தவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம். நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். முதலில், நாம் இந்தியர்கள், கன்னடர்கள். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாணவிகள் பிடிவாதம் பிடிப்பது சரியானதல்ல. எந்த அச்சுறுத்தலுக்கும் எங்கள் அரசு இணங்காது" எனத் தெரிவித்தார்.

அதேவேளையில், கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் தலைவர் அத்தாவுல்லா புஞ்சல்கேட், நீதிமன்றத்தின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என விமர்சித்த நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர இருப்பதாக இந்து அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹிஜாப் தடை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ABOUT THE AUTHOR

...view details