புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் அமர அனுமதி மறுக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய மறுத்துவிட்டதுடன், இது இஸ்லாமிய அடிப்படை உரிமைகளில் இல்லை” எனத் தீர்ப்பளித்தனர்.
ஹிஜாப் மேல்முறையீடு : இந்தத் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞர் தேவதக் காமத், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் கோரிக்கை விடுத்தார்.
அப்போது மார்ச் 28ஆம் தேர்வுகள் இருப்பதால் மாணவிகள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதற்கு நீதிபதிகள் தேர்வுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், இந்த விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்றனர்.
இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை முதலில் உடுப்பில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் தோன்றியது. இங்கு பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ச்சியாக போராட்டங்கள் வெடித்தன.
ஹிஜாப் அணியத் தடை : இந்நிலையில் இது தொடர்பான வழக்கு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், “பள்ளி, கல்லூரிகளில் சீருடை மட்டுமே போதுமானது, இஸ்லாமிய அடிப்படை உரிமைகளில் ஹிஜாப் இல்லை” என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு- கர்நாடக காவலர்களால் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 'ஹிஜாப் எங்களது உரிமை' மணமேடையில் குரல் எழுப்பிய மணமக்கள்..