புதுச்சேரி:காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிறைச்சாலைக்குள் யோகா, நடனம் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதையும் தாண்டி சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே செல்லும் கைதிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு ஏக்கரில் கைதிகளுக்கு விவசாயம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி கைதிகள் சிறைச்சாலைக்குள் வாழைமரம், பலா, காய்கறிகள், பழ வகைகள், செடிகள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனை அறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.
அப்போது சிறைச்சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிட்ட அவர் கைதிகள் உருவாக்கியுள்ள விவசாய தோட்டங்களையும் பார்வையிட்டு ஆச்சரியமடைந்தார். மேலும் கைதிகளிடம் அவர்கள் செய்யும் விவசாய முறைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களை பாராட்டினார். தொடர்ந்து விவசாயிகள் புதிதாக பயிர் செய்துள்ள பழத்தோட்டங்களை திறந்து வைத்தார். இந்த பழத்தோட்டங்களில் பட்டர் ஃப்ரூட், டிராகன் பழம், திராட்சை, காபி, தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் கைதிகளின் செயல்பாட்டை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும், நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள் என்று என்னை யாரேனும் கேட்டால் நான் புதுச்சேரியில் உள்ள ஆசிரமத்திற்கு சென்று வந்தேன் என்று கூறுவேன் என கூறினார்.