மும்பை:இந்தியாவின் "நைட்டிங்கேல்" என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் அவரது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளனர்.
லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரி உஷா மங்கேஷ்கர் கூறுகையில், "லதா மங்கேஷ்கரின் மறைவை ஏற்றுக்கொள்ள எங்களது குடும்பத்தினர் இன்னும் முயற்சித்து வருகிறார்கள். அவரது ரசிகர்கள் பலரும் அவரைத்தேடி எங்களது வீட்டிற்கு வந்து, அவரை நினைவு கூர்கிறார்கள். அவரது பிரிவால் நாங்கள் சோகமாகவே இருக்கிறோம், சொல்லப்போனால் இது சோகத்தைவிட மிகவும் கொடுமையாக உள்ளது" என்றார்.
லதா மங்கேஷ்கரின் நெருங்கிய உறவினரான ரச்சனா ஷா கூறும்போது, "லதா மங்கேஷ்கர் ஒரு 'நம்பமுடியாத மிகப்பெரிய சக்தி'. அவர் நம்முடன் இல்லை என்பதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் நம்மை விட்டுப்பிரிந்து ஓராண்டாகிறது, ஆனால் இன்னும் அவரது மரணம் நம்பமுடியாததாக இருக்கிறது.
அவரது குரல் நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அவரது நினைவுகளும் அப்படியே இருக்கின்றன. இப்போதும் ஒவ்வொரு முறையும் எனது செல்போனில் மணி அடிக்கும்போதும், லதா மங்கேஷ்கர் எனக்கு போன் செய்வது போலவே தோன்றுகிறது.
மங்கேஷ்கர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அடிக்கடி பூஜைகள் செய்வார், அவரது அறை வத்தி வாசத்தால் நிறைந்திருந்தது. அதேபோல் அவர் நன்றாக சமையல் செய்வார். இதுபோன்ற அவரது சிறிய சிறிய விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் இழந்து வாடுகிறோம்.
அதேபோல் அவர் அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்வார். நீங்கள் அவருடன் அமர்ந்திருந்தால், அமைதியாக உணர்வீர்கள். அவரது குடும்பம், நண்பர்கள், உடன் பணிபுரிவோர், ரசிகர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாகவும், சவுகரியமாகவும் உணர வைத்தார். அவர் தனது பாடலை கேட்போருக்கு ஆறுதலாகத் திகழ்ந்தார். அவரது குரலில் ஒரு தெய்வீகத்தன்மை இருந்தது. அவர் பரந்த மனம் கொண்டவர், அனைவரிடமும் அன்பு காட்டினார்" என்றார்.
இதையும் படிங்க: வளையோசை கலகலவென.. காலத்துக்கும் ஒலிக்கும் லதா மங்கேஷ்கர் குரல்!