விஜயவாடா (ஆந்திரா): தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி காவல் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, விஜயவாடா சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிமன்றம், அவரது வீட்டுக் காவல் மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆந்திர சிஐடி காவல் துறை தன் மீது பதிந்த வழக்கையும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் அளித்த நீதிமன்றக் காவலையும் ரத்து செய்து உத்தரவிடுமாறு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (செப் 13) நடைபெற்றது. அப்போது, சந்திரபாபு தாக்கல் செய்து உள்ள ரத்து மனு மீது பதில் அளிக்க சிஐடி காவல் துறை தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் சிஐடி காவல் துறை தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பான வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. மேலும், சிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட காவல் மனு மீது அதுவரை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.