டெல்லி: திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை பதிலளித்துள்ளது.
மாநிலங்களவையில் வில்சன் எம்பி மூன்று கேள்விகளை முன் வைத்திருந்தார்:
ஹெச்எல்எல் பயோடெக் செங்கல்பட்டு, பிசிஜி தடுப்பூசி ஆய்வகம் சென்னை, பாஸ்டர் நிறுவனம் குன்னூர் ஆகியவற்றை முதலமைச்சர் கேட்டுக்கொண்ட பின்பும் தடுப்பூசி தயாரிப்புக்கு பயன்படுத்தாதது ஏன்?
மாநில வாரியாக விநியோகம் செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு தடுப்பூசியின் விலை என்ன? உள்ளிட்ட விவரங்களை தடுப்பூசியின் பெயர் வாரியாக வெளியிட வேண்டும்?
இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக உலக சுகாதார மையத்திடம் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உடனடியாக பயன்படுத்த அனுமதி கோரி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஆகிய கேள்விகளை முன் வைத்திருந்தார்.
சுகாதாரத் துறையின் பதில்:
இதற்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது, குறிப்பிட்ட அந்த மூன்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் சென்னை, குன்னூரில் உள்ள நிறுவனங்களில் உயிர் பாதுகாப்பு நிலை (Biosaftey level) சரியாக இல்லை. அதனால் அதை பயன்படுத்த முடியாது.
செங்கல்பட்டில் உள்ள ஹெச்எல்எல் பயோடெக்கை பயன்படுத்திக் கொள்ள பல்வேறு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2021 இறுதிக்குள் தடுப்பூசிக்கு மட்டும் 9725 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டு மாநில வாரியான தடுப்பூசி விநியோக கணக்கை சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.
கோவிஷீல்ட் உடனடியாக பயன்படுத்தக் கூடிய தடுப்பூசி எனும் உலக சுகாதார மையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஜூலை 19ஆம் தேதி கோவாக்சினை இதில் சேர்க்கச் சொல்லி கேட்டிருக்கிறோம். உலக சுகாதார மையம் இந்த அங்கீகாரத்தை வழங்க 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி குறித்து டெல்லி போலீசார் விசாரணை