தரமற்ற சாலையால் ஆத்திரம் - தனது பைக்கிற்கு தானே தீ வைத்த விநோத மனிதர் புதுச்சேரி: புதுச்சேரி- கடலூர் சாலையில் கடந்த சில வருடங்களாக பள்ளம்மேடு மிகுந்த கரடு, முரடான சாலையாக செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சாலையில் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
புதுச்சேரி- கடலூர் சாலையில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் மிகுந்த பள்ளங்கள் மேடுகளாக சாலைகள் தரமற்று இருப்பதை அறிந்து மத்திய அரசின் மூலம் அந்த சாலை ஐந்து கிலோமீட்டர் தூரம் போடுவதற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
அப்போது அந்த சாலை சரிவர அமைக்காததால் தரமற்று இருப்பதாகக் கூறி கரிக்கலாம்பாக்கம் பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் அமைப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தனர். இதனால், அப்பணி தற்காலிகமாக அப்போது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இச்சாலையை செப்பனிடும் பணி மீண்டும் கடந்த இரு தினங்களுக்கு முன் துவக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த தணிகாச்சலம் என்பவர் நேற்று தனது ஹோண்டா சைன் பைக்கை தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நிறுத்தி, அதன் மீது பெட்ரோல் ஊற்றி வைத்து, கொளுத்தி விட்டு உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிக்கலாம்பாக்கம் காவல்துறையினர் தணிகாச்சலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சாலை போடும் பணி தரமற்றது எனக் கூறி இளைஞர் ஒருவர் தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்தி அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிறுத்தை விவகாரம்: வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் கோரிக்கை