டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கலாநிதி மாறன் தன்னிடம் இருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவீதப் பங்குகளை அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அஜய் சிங்கிடம் விற்பனை செய்தார். அப்போது, இருதரப்பினரிடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி, அந்நிறுவனத்திற்காக தான் செய்த பல்வேறு செலவுகளுக்காக வட்டியும், அசலும் சேர்த்து 679 கோடி ரூபாயை அஜய் சிங் வழங்க வேண்டுமெனக் கோரி, கலாநிதி மாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓராண்டுக்குள் ஐந்து தவணையாக பணத்தை வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அஜய் சிங் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, வேறு வழியில்லாமல் அசல் 579 கோடி ரூபாயை அஜய் சிங் கலாநிதி மாறனுக்கு வழங்கினார். ஆனால், வட்டியை வழங்கவில்லை.