பாலக்காடு:நிமிஷா பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டிலிருந்துள்ளனர். இந்த நிலையில், அவரது கணவர் மற்றும் மகள் இந்தியாவிற்குத் திரும்பினர். ஆனால், சில வேலை காரணமாக நிமிஷா பிரியா ஏமன் தங்கி இருந்தார். மேலும், ஏமன் நாட்டிலுள்ள தலால் மெஹதி என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இதனால், தலால் மெஹதி என்பவர் நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளார். நிமிஷா பிரியா கேட்ட போது பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளார்.
இதனால், நிமிஷா பிரியாவால் இந்தியா வர முடியாத நிலை இருந்துள்ளது. இதனையடுத்து, தனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெறும் முயற்சியில் 2017ஆம் ஆண்டு தலால் மெஹதிக்கு மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளார். ஆனால், தலால் மெஹதி உயிரிழந்தார். மேலும், அவரது உடலை மறைக்கும் முயற்சியின் போது ஏமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு ஏமன் நீதிமன்றம் நிமிஷா பிரியாவிற்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. அதன் பின் 6 வருடங்களாக ஏமன் சிறையில் நிமிஷா பிரியா இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஏமன் செல்ல அனுமதி கோரி நிமிஷா பிரியாவின் தயார் பிரேமகுமாரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவிக்கும் போது, "ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தூக்குத் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஏமன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேல் முறையீட்டை ஏமன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், ஏமன் அதிபரால் மட்டுமே நிமிஷா பிரியாவின் மரணத்தை ரத்து செய்ய முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டது.