பெங்களூரு:வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடையின்றி மாற்றும் வகையில், 2021ஆம் ஆகஸ்ட் 26இல் சட்டபூர்வமான பொது விதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதனையடுத்து பாரத் தொடர்வரிசை (BH) எனும் புதிய பதிவு முறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இல் சேர்க்கப்பட்டது.
இது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின்கீழ் வருகிறது. முன்னதாக தொழில் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் வாகனங்கள், அம்மாநிலத்துக்கு ஏற்றவாறு வாகனப் பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் தொடர்வரிசை பதிவு முறை, அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பாதுகாப்பு அலுவலர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.