பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முற்போக்கு பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான பூனம் கெளசிக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "இந்திய அரசியலமைப்பின் 15 (3)ஆவது பிரிவின்படி, பெண்களுக்கு தேவையான வசதிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகளிடம் தனி வசதிகளை பெற வேண்டும் என்பது அவர்களுடைய சட்டப்படியான உரிமை. ஆனால், அரசுகள் அத்தகைய வசதிகளை வழங்கவில்லை.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் பெண்கள் கணிசமான அளவில் பணியாற்றி வருகின்றனர். உடற்சார் உழைப்பு, அறிவுசார் பங்களிப்பு என அவர்களின் பங்கேற்பு உள்ளது. கடைநிலை தொழிலாளர்களில் தொடங்கி அலுவலக உயர் பதவிகள் என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் நிரந்தர ஊழியராகவோ, தற்காலிக ஒப்பந்த பணியாளராகவோ உழைப்பை வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, அமைப்புசாரா துறைகளில் தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அதிலும், பெண்கள் தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தல்கள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. பெண்கள் மாதத்திற்கு நான்கு முதல் ஆறு நாள்கள் மாதவிடாய் வலியை அனுபவித்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அதனை எதிர்க்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
மாதவிடாய் காலத்தில், விலையில்லா சுத்தமான கழிப்பறைகளும், சுகாதாரத்தைப் பேண உதவும் நாப்கின்களும் எளிய அணுகலில் பெண்களுக்கு கிடைக்க வேண்டும். டெல்லி போன்ற நகரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பொது கழிப்பறைகளில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கழிப்பறைகளில் விலையில்லா சுகாதார நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும். சிரமத்திற்குள்ளாகும் பெண்கள் இதன் மூலமாக எளிதாக பயன் அடையலாம்.
உழைக்கும் பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்புகள் வழங்கப்பட வேண்டும். மாதவிடாய் என்பது பெண்களின் உடலுக்குள் நிகழும் உயிரியல் மாற்றம். அந்த நேரத்தில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பணி என்கிற பெயரில் அந்த நேரத்தில் அவர்கள் மீது தொடரும் சித்திரவதை ஒழிக்கப்பட வேண்டும்.