திருவனந்தபுரம்: ஏப்ரல் 6ஆம் தேதி கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலின்போது புகையத் தொடங்கிய ஹவாலா வழக்கு, தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் ஹவாலா வழக்கு குறித்த விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 6ஆம் தேதி காலை 10 மணிக்கு சுரேந்திரனை திரிச்சூர் போலீஸ் கிளப்பில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ள காவல் துறையினர், அவரது ஓட்டுநரிடமும் உதவியாளரிடமும் முன்னதாக இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை கொள்ளை
நில பரிவர்த்தனைக்காக முன்கூட்டியே பணம் செலுத்துவதற்காக தனது வாகனத்தில் கொண்டு சென்ற 25 லட்சம் ரூபாய் பணம் திருச்சூர்- கோடக்கரா நெடுஞ்சாலையில் தன்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னதாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்தப் பணம் தேர்தலுக்கு விநியோகிக்க பாஜக வைத்திருந்த ஹவாலா பணத்தின் ஒரு பகுதி எனக் கூறப்பட்டு, கொள்ளை சம்பவத்துடன் கேரள பாஜக தொடர்புபடுத்தப்பட்டு வந்தது.
பழங்குடியினத் தலைவருக்கு வழங்கப்பட்ட பணம்
குறிப்பாக பழங்குடியின ஜனாதிபத்திய ராஷ்டிரிய கட்சியின் தலைவர் சி.கே.ஜானுவுக்கு, அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியதற்காக 10 லட்சம் ரூபாய் வழக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.