டெல்லி: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த நதிநீர் பங்கீட்டிற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது. அந்த வகையில், வழக்கம்போல் இந்த ஜூலை மாதமும் போதிய அளவு தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவில்லை.
காவிரியில் தண்ணீர் வராததால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பயிர்கள் கறுகிய நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதன் பிறகு போதிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. பருவமழை குறைந்ததால் நீர் இருப்பு இல்லை என கர்நாடகா கூறியது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு பிலிகுண்டுலுவில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. அதில், தங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறந்து விடுகிறோம் என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஆணையமும் ஏற்றுக் கொண்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரசுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழக அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் அமைதி காப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை என்றும், ஆணையம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கர்நாடகா தாக்கல் செய்த பதில் மனுவில், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளதால், கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை என்றும், இருப்பினும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.