புது டெல்லி:அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தும் மாபெரும் ஊர்வலமான ‘மெஹன்கை பர் ஹல்லா போல்’ எனும் ஊர்வலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “ பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நாட்டைப் பிரித்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளனர். தங்களின் வருங்காலம், வேலைவாய்ப்பின்மை போன்றவைகள் மக்களை வெறுப்புக்குள்ளாக்கியுள்ளன” என்றார்.
மேலும், “இந்தியாவில் வெறுப்பு மனநிலை வளர்ந்து வருகிறது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகின்றனர். இந்த அச்சத்தால் யாருக்கு லாபம்..? ஒரு ஏழை, விவசாயி அல்லது ஒரு சிறு வியாபாரி இந்த நரேந்திர மோடி அரசினால் லாபம் அடைய முடிகிறதா..? இந்த பயம் மற்றும் வெறுப்பு மனநிலையால் வெறும் இரண்டே தொழிலதிபர்கள் மட்டுமே இந்தியாவில் லாபம் அடைகிறார்கள். மோடியின் கொள்கை முடிவுகள் இரண்டே தொழிலதிபர்களுக்கு மட்டும் லாபத்தைக் கொடுக்கிறது.
நரேந்திர மோடி பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்தார். அதனால் எழை மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது..?. மூன்று விவசாய சட்ட மசோதா கொண்டு வந்தது கூட விவசாயிகளுக்காக அல்ல. அந்த இரண்டு தொழிலதிபர்களுக்காகத் தான். பின்பு, விவசாயிகள் தெருவில் இறங்கி தங்களின் பெரும் எதிர்ப்பை காட்டியதால் அது நிராகரிக்கப்பட்டது “ என்றார்.
சிறு மற்றும் குறு வியாபாரங்களின் முதுகெழும்பை பிரதமர் நரேந்திர மோடி உடைத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ”ஒரு பக்கம் நீங்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டு வருகிறீர்கள், மறு பக்கம் அதிகரிக்கும் விலைவாசி. காங்கிரஸ் கட்சி 70 வருடங்களாக என்ன செய்தது என நரேந்திர மோடி கேட்கிறார். நான் சொல்கிறேன், 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சி இத்தகைய விலை வாசி ஏற்றத்தை ஏற்படுத்தியதேயில்லை” என்றார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, ஊடகங்களையும் தாக்கினார். அதில், “ஊடகமும் இந்த இரு தொழிலதிபர்களின் கீழே உள்ளன. இது யாரது சேனல் அது யாருக்காக வேலை பார்க்கும் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள் என இரண்டும் இந்த இரண்டு தொழிலதிபர்களுடையதாகிவிட்டது.