புது டெல்லி: வெறுப்பும், வன்முறையும் நாட்டை பிளவுப்படுத்த வந்துள்ளன, அனைத்து குடிமக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தியாவை பாதுகாக்க வேண்டும் எனத் திங்கள்கிழமை (ஏப்.11) ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள சில மாநிலங்களில் ஸ்ரீ ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜேஎன்யூ) அசைவம் சாப்பிடக் கூடாது என வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி இக்கருத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், “வெறுப்பு, வன்முறை மற்றும் ஒதுக்கிவைத்தல் ஆகியவை நமது அன்புக்குரிய நாட்டை பலவீனப்படுத்துகின்றன.
சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதற்கு ஒன்றாக நிற்போம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.