குருசேத்திரா:காலிஸ்தான் தனி நாடு கோரி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை போலீசார் அவரை நெருங்கிய நிலையில், நூலிழையில் தப்பினார். அதன்பின் தலைமறைவாகி உள்ள அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஹரியானா மாநிலம், குருசேத்திராவில் உள்ள வீட்டில், அம்ரித்பால் மற்றும் அவரது உதவியாளர் பபல்ப்ரீத் சிங் ஆகியோர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அம்ரித்பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பல்ஜீத் கவுர் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹரியானா போலீசார், பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாறுவேடத்தில் அம்ரித்பால்?: இதற்கிடையே பஞ்சாப் காவல்துறை தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீலநிற ஜீன்ஸ் பேன்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து குடைபிடித்த படி நபர் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அவர் அம்ரித்பால் சிங்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அம்ரித்பால் டர்பன் அணிந்ததுடன், தனது மீசையை சரி செய்து ஷேவிங் செய்துள்ளதாகவும் கைதான பெண் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.