நுஹ் :அரியானாவில் மத ஊர்வலத்தில் வெடித்த கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 116 பேர் கைது செய்யப்பட்டு நிலையில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்து உள்ளார்.
அரியானா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. குருகிராம் - ஆல்வார் அருகே வந்த ஊர்வலதத்தை சிலர் தடுத்து நிறுத்திய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.
கலவர பூமி போல் இடம் காட்சி அளித்த நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கலவரத்தை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர் உள்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கலவரம் தொடர்பான வதந்திகள் பரவாமல் தடுக்க நுஹ் பகுதியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. பள்ளிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.
நுஹ், பல்வால், பரிதாபாத், ரெவாரி, குருகிராம், மகேந்திராபாத், சோனிபட், பனிபட் ஆகிய 8 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீசார், துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.