சண்டிகர்: சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற கோஷம் பல ஆண்டுகளாக ஒலித்து வருகின்றன. தங்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் வாரீஸ் பஞ்சப் டி என்ற அமைப்பைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங்.
அம்ரித் பால் சிங்கின் கூட்டாளி லவ் பிரீத்தை, கடத்தல் வழக்கு ஒன்றில் கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட லவ் பிரீத்தை விடுதலை செய்யக் கோரிம், பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பஞ்சாப் போலீசார் பலருக்கு காயம் ஏற்பட்டது.
அப்போதைய நிலையை சரி செய்ய சிறையில் இருந்த லவ் பிரீத்தை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அம்ரித் பால் சிங்கின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த சனிக்கிழமை (மார்ச்.18) அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பஞ்சாப்பில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை கருதிய போலீசார், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டன. பதற்றம் அதிகம் காணப்படும் இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மேலும் தலைமறைவான அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங்கின் தந்தை தர்சம் சிங் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். மேலும் தன் மகன் அம்ரித் பால் சிங்கை போலீசார் கடந்த சனிக்கிழமையே (மார்ச். 18) கைது செய்து விட்டதாகவும், அது குறித்த உண்மையை வெளியே சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனு குறித்த விசாரணையை நாளை (மார்ச். 21) ஒத்திவைத்த பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி, மனு குறித்து அறிக்கை அளிக்கக் கோரி பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டார். இதனிடையே அம்ரித் பால் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அவரது மாமா மற்றும் கார் ஓட்டுநர் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அம்ரித் பால் சிங் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் பறந்த தேசியக் கொடியை அகற்றி காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள் கோஷ எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கக் கோரி கேட்டு உள்ளது.
இதையும் படிங்க:லண்டனில் இந்திய தேசியக் கொடி அகற்றம் - மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்!