குவாலியர்: மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த ராகுல் என்பவருக்கும், அவரது காதலி ஹினா கானுக்கும் காஸியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜத்தில் திருமணம் நடந்துள்ளது. இஸ்லாமியரான ஹினா கான் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்ததாக, திருமணச் சான்றிதழும் வாங்கியுள்ளனர்.
திருமணத்தின்போது ஹினா மைனர் என்பதால், ஹினாவின் பெற்றோர் ராகுல் மீது புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் அழைத்து விசாரித்தனர். ஹினா பெற்றோருடன் செல்ல விரும்பாததால், அவரை காப்பகத்திற்கு அனுப்பினர்.
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹினா தற்போது 18 வயதைக் கடந்துவிட்டதால், அவரது விருப்பப்படி பெற்றோர் அல்லது காதலன் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் எனத் தெரிவித்தது.
அதேநேரம், ஆர்ய சமாஜத்தில் மதம் மாற்றப்பட்டு இருவருக்கும் நடந்த திருமணம் செல்லாது என்றும் உத்தரவிட்டது. ஒருவரை மதம் மாற்றும் உரிமை எந்த மத நிறுவனத்துக்கும் இல்லை என்றும் தெரிவித்தது. மதம் மாற வேண்டும் என்றால், முறையாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து, ஆட்சேபனைகளை கேட்டறிந்த பிறகே, மதம் மாற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற உறவினர்: சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!