வயிறு, இது உங்கள் உடலின் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது பல முக்கிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது, எனவே அதை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உடல் எடை, மனநிலை, அறிவாற்றல் ஆரோக்கியம், அழற்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த உதவுவதால், குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால், அவன், இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் பெற்றவன் ஆகின்றான். வயிற்றின் ஆரோக்கியம் நம் உடலில் மிகவும் முக்கியமானது. வயிறு 'இரண்டாவது மூளை' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், நம் மூளையில் ஒரு எண்ணம் உதித்தால், முதலில் வினைபுரிவது வயிறுதான். அதனால்தான் மன அழுத்தத்தில் இருக்கும்போது வயிறு அசௌகரியமாக இருப்பதாக உணர்கின்றோம், நாம். ஒருவரிடம் கோபப்படும் பட்சத்தில், நமது உடலில் அமில - காரத்தன்மை அதிகரிக்கும். எனவே, வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களால் வயிற்றின் ஆரோக்கியம் கெடுவதாக கூறப்படுகிறது.
எந்தெந்த வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதால், குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதை விரிவாக விவரிக்கிறது இந்தக் கட்டுரை. கீழ்க்கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைக் குறைத்து, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோமாக...
சர்க்கரைப் பொருட்கள்:நமது உடலில் செரிமான நிகழ்விற்கு அடிப்படை ஆதாரமாக உள்ள குடலில், நன்மை தரும் மற்றும் தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மிக அதிக அளவில் உள்ளன. நாம் உட்கொண்ட உணவை செரிமானம் செய்வதற்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வாயுப்பிடிப்பு, அல்சர் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகின்றன.
சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், நமது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாது, தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதன்காரணமாக, பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. சர்க்கரை மற்றும் சர்க்கரைச் சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வதைத் தவிர்த்து, குடல் ஆரோக்கியம் பேணுவோம்.