குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை நடக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்றுடன் (நவம்பர் 29) நிறைவடைந்தது. இந்த தேர்தலில் சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் மாவட்டங்களில் பாஜக தன்னை பலமாக உணர்வது போல் தெரிகிறது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி கனவாகவே இருக்கும் என்று பாஜக நம்புகிறது. மறுப்புறம், தன்னை வலுவான எதிர்க்கட்சியாக எண்ணும் ஆம் ஆத்மி மோர்பி பாலம் விபத்து எதிரொலி, சிறுபான்மையினரின் ஒற்றுமை பாஜகவுக்கு எதிராக திரும்பும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருகிறது.
சௌவுராஷ்டிரா பிராந்தியத்தின் முக்கிய தொழில் நகரமான மோர்பியில் அக்டோபர் 30ஆம் தேதி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து மோர்பி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலும் பாஜவுக்கு எதிர்வினையாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. குஜராத்தின் செல்வாக்கு மிக்க படேல் சமூகம் சௌவுராஷ்டிராவின் வாக்கு வங்கியில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சமூக மக்களை பாஜக தன்வசம் வைத்துள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், குஜராத்தின் முதலமைச்சர் பதவியை படேல் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேலுக்கு பாஜக வழங்கியுள்ளது. இதனால், மோர்பி விபத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது பாஜகவின் எண்ணமாக உள்ளது.
குஜராத் தேர்தலில் 2ஆம் கட்டத்தைவிட முதல் கட்ட தேர்தலே பாஜகவுக்கு வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஏனென்றால், சௌராஷ்டிரா பிராந்தியம் 2017ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 48 இடங்களில் 28 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த எண்ணிக்கை 2012ஆம் தேர்தலில் 15ஆக இருந்தது. அந்த வகையில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளின் சராசரி எண்ணிக்கை 13ஆக உள்ளது. இதற்கு காரணம் படேல் சமூகம் பாஜக மீது கொண்டிருந்த அதிருப்தியே. இதனை மாற்றவே படேல் வேட்பாளர்களுக்கு பாஜக முன்னுரிமை கொடுத்துவருகிறது. 2017ஆம் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சி தாவல், இடைத்தேர்தல்கள் மூலம் காங்கிரஸ் வசம் இருந்த பல தொகுதிகளை பாஜக கைப்பற்றிவிட்டது.